சுகாதாரப் பணியாளர்களுக்கு போலீஸ் மரியாதை

திருநெல்வேலி: கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உன்னத பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு மரியாதை அளித்து கவுரவப்படுத்தும் விதமாக திருநெல்வேலி போலீசார் சார்பில் மரியாதை காப்பு அணிவகுப்பு கொடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் அதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு நாடெங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே வர தயங்கும் நிலையில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளான இடங்களிலும் தங்கள் உயிரை பணையம் வைத்து சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சியின் அனைத்து ஊழியர்களும் இந்தப் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு திருநெல்வேலி மாநகர போலீஸ் சார்பில்“மரியாதை காப்பு அணிவகுப்பு” அளித்து கவுரவப் படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மரியாதை காப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் போலீசாரின் மரியாதை காப்பு அணிவகுப்பை மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் பெற்றுக்கொண்டார். இதில் சுகாதார பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.