கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர், பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே, தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தவறை உணர்ந்ததும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், 3 பேர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாயமான டில்லி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாயமான டில்லி நபர், ஓட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு வேலை தேடி கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி வந்தார். அங்கு கார் திருட்டு வழக்கில், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்ததும், கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு வழக்குகளிலும் மூன்று மாத சிறைதண்டனை முடிந்து கடந்த 16ல் விடுதலையானார். அதன் பின் ஓரிரு நாள் புதுச்சேரி கடற்கரை பகுதியில் சுற்றி திரிந்தார். கடந்த 21 ல் விழுப்புரம் பஸ் நிலையம் சென்ற அவரை, வட மாநில டிரைவர்களுடன் ஒரு வாரம் தங்கியுள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் பட்டியலில் இருந்தால், அவர் கடந்த 6 ல் விழுப்புரம் ' கொரோனா' சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். டில்லி வாலிபர் உட்பட 26 பேருக்கு கொரோனா இல்லை என நேற்று முன்தினம்(ஏப்.,7) தகவல் வந்தது. இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.